மத்திய அரசு நிறுவனமான மருத்துவப் பூச்சியியல் ஆராய்ச்சி மய்யம், மதுரையில் 85 ஆயிரம் கொசுக்களைக் கொண்ட அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் கொசுக்களால் உரு வாகும் பல நோய்களை ஒழிக்க இந்த மய்யம் உதவி வருகிறது.
சர்வதேச அளவில் புகழைத் தேடி தந்து கொண்டிருக்கிறது மதுரையில் உள்ள மருத்துவப் பூச்சியியல் ஆராய்ச்சி மய்யம். மதுரை சின்ன சொக்கி குளத்தில் உள்ள சரோஜினி தெருவில் உள்ள இந்த மய்யத்தின் முக்கியப் பணி கொசுக்கள், உண்ணிகள் போன்ற நோயைப் பரப்பும் கணுக்காலிகளைப் பற்றியும், அவை பரப்பும் நோய்களைப் பற்றியும் முழுமையாக ஆய்வு செய்வது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மய்யங்களில் ஒன்றான இது, கடந்த 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுபோன்ற மய்யங்கள் இல்லை என்றால், டெங்கு, சிக்குன் குனியா என்பதெல்லாம் கொசுக்கடியால் வருகிற நோய்கள் என்பதுகூட தெரியாமலேயே போயி ருக்கும். இந்தியாவில் எத்தனை வகை கொசுக்கள் உள்ளன, அவற்றின் வசிப்பிடம் எது? அவற்றின் லார்வா (கொசுப்புழு)க்களின் தன்மை என்ன என்பதைப் பற்றியெல்லாம் பல ஆய்வுகளை நடத்தி, பல புத்தகங்களை எழுதியுள்ளனர் இங்குள்ள விஞ்ஞானிகள். இவர்களின் முக்கியமான ஆய்வுகள் எல்லாமே டெங்கு, சிக்குன் குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய், மலேரியா போன்றவற்றைப் பரப்பும் கொசு இனங்களைப் பற்றியவைதான். இந்தக் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவது, மனிதர்களுக்கு இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத் துவது, தடுப்பு மருந்து மற்றும் குணப்படுத்தும் மருந்துகளை அறிவது என பல நூற்றுக்கணக்கான ஆய்வு களை நடத்தியுள்ளது இந்த மய்யம்.
இந்த ஆய்வு முடிவுகளின் அடிப் படையில்தான் மத்திய- மாநில அரசுகள் சில குறிப்பிட்ட நோய்களை ஒழிப்ப தற்கான கொள்கை முடிவுகளை எடுத்து வருகின்றன. உலக சுகாதார மய்யமே இந்த மய்யத்துக்கு நிதியுதவி அளித்து, ஆய்வு முடிவுகளைப் பெற்று வருகிறது.
மதுரையில் 58 வகை கொசு
மதுரையில் எத்தனை வகை கொசுக்கள் உள்ளன என்ற பட்டியலே இவர்களிடம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 58 வகை கொசுக்கள் வசிக்கின்றன. இந்தக் கொசுக்கள் எந்தெந்த பகுதியில் அதிகம் வாழ்கின்றன, உணவுக்காக அவை சார்ந்திருப்பது மனிதர்களையா, மாடு களையா, பன்றிகளையா, தாவரங் களையா என்பன போன்ற விவரங்களும் இந்த மய்யத்தில் உள்ளன. இதற்காக மாங்குரோவ் காடுகள், அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள், குளம், குட்டை, சாக்கடை, நெல்வயல்கள் என்று பல்வேறு பகுதியில் பிடித்த கொசுக்களை இந்த மய்யத்தில் வைத்துள்ளனர்.
கொசு மியூசியம்
இந்தியாவில் மொத்தம் 403 வகை கொசுக்கள் உள்ளன. அதில் 242 வகை கொசுக்கள் இங்கே இருக்கின்றன. சில வகை கொசுக்களை ஆய்வகத்திலேயே இனப்பெருக்கம் செய்ய வைத்து ஆராய்ச்சி செய்கின்றனர் (ஆய்வகத்துக்கு வெளியே கொசுக்கள் இல்லை என்பதால், இந்த அலுவலகத்தில் யாருக்கும் கொசு கடிப்பதில்லை). இங்கே கொசு மியூசியம் ஒன்று இருக்கிறது. அதில் 85 ஆயிரம் கொசுக்களின் மாதிரிகள் (உயிரற்ற உடல்) வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே இதுதான் மிகப்பெரிய கொசு மியூசியம் என்கின்றனர்.
மேலூர் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சலால், கடந்த 2012-ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கானோர் இறந்தபோது, டெங்கு பாதிப்பு தமிழகத்தில் இல்லவே இல்லை என்று மறுத்தது சுகாதாரத்துறை. ஆனால், அதற்கு முன்பே டெங்கு பரவுவது குறித்து ஆதாரப்பூர்வ மாக கண்டறிந்து, அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது இந்த மய்யம் என்பது வெளியே தெரியாத முக்கியமான தகவல்.
80 கோடியில் புதிய கட்டடம்
தற்போது வீதியில் ஒரு கட்டடத்தில் செயல்படும் மருத்துவ பூச்சியியல் ஆராய்ச்சி மய்யத்தை, மிகப்பெரிய வளாகத்துக்கு மாற்றும் வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 25ஆ-ம் தேதி வடபழனியில் அடிக்கல் நாட்டப் பட்டது. ஆனால், இதுவரையில் புதிய கட்டடம் கட்டப்படவில்லை. இந்த மய்யம் எப்போது கட்டப்படும் என்று அதன் இயக்குநர் பி.கே.தியாகியிடம் கேட்டபோது, புதிய கட்டடம் கட்டு வதற்காக சுமார் 80 கோடியில் வரைவுத்திட்டம் தயாரித்து அரசின் ஒப்பு தலுக்கு அனுப்பினோம். தற்போதுதான் ஒப்புதல் கிடைத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் கட்டட பணிகள் தொடங் கும் என்றார்.
-விடுதலை ஞா.ம.26.7.14