செயலாளர் - செ.ர.பார்த்தசாரதி
பொருளாளர் - கா.நாகராஜ்
துணைத் தலைவர் - கோ.குமாரி
துணைச் செயலாளர்- 1.கோ.கணேஷ், 2.ம.கருணாநிதி
செயற்குழு உறுப்பினர்கள்
31.12.2018 அன்று நெய்வேலி முதலாம் அனல் மின் நிலைய அலுவலகத்தில், 34 ஆண்டுகாலம் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சிறப்பு முதுநிலை ஓட்டுநராக பணிபுரிந்த கம்மாபுரம் ஒன்றிய தலைவர் நா.பாவேந்தர் விரும்பி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது, முதன்மை பொது மேலாளர் சேரன் அவர்களும் பொது மேலாளர் சம்பத் அவர்களும், திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களும் பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறந்த முறையில் பணி செய்து 34 ஆண்டுகாலம் தன் உழைப்பை என்எல்சி நிறுவனத்துக்கு வழங்கி சிறு விபத்து கூட இல்லாமல் ஓட்டுநராக தன் பணியை நிறைவு செய்ததை நினைவு கூர்ந்து வாழ்த்தினார்கள். உதவி மேலாளர் மனிதவளம் என்எல்சி இந்தியா விசயலட்சுமி பாவேந்தர், அவர்களின் மகள் வி.பா.தமிழ் பொன்னி அ.கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். இதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக 500 ரூபாய் வழங்கினார்
- விடுதலை நாளேடு, 5.2.19
பகுத்தறிவில்லாதவர்களுக்கு முதுமை'' வரலாம்; பகுத்தறிவாளர்களுக்கோ முதிர்ச்சி''யே வரும்!
பாவேந்தர் விரும்பியின் பணி நிறைவு பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
நெய்வேலி, ஜன.22 பகுத்தறிவில்லாதவர்களுக்கு முதுமை'' வரும்; பகுத்தறிவாளர்களுக்கோ முதிர்ச்சியே'' ஏற்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணிவிழா மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா
10.1.2019 அன்று நெய்வேலியில் கம்மாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் நா.பாவேந்தர் விரும்பி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா - நா.பாவேந்தர் விரும்பி - விஜயலட்சுமி இணையரின் மணிவிழா ஆகிய விழாக்களில் பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் ஒரு வரலாற்றுப் பெருமை மிகுந்த நிகழ்ச்சி என்று நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய அளவிலே நடைபெறக்கூடிய அருமை பெரியாரின் பெருங்குடும்பங் களில் எடுத்துக்காட்டான குடும்பங்களில், கொள்கைக் குடும்பமாக, சுயமரியாதை பல்கலைக் கழகமாக இருக்கக்கூடிய அன்புத் தோழர்கள் பாவேந்தர் விரும்பி - விஜயலட்சுமி ஆகியோருடைய மணிவிழா - பணி நிறைவு பாராட்டு விழா ஆகிய இருபெரும் விழாக்களுக்கு வந்திருக்கக்கூடிய கழகப் பொறுப்பாளர்களே, தோழர் களே, அனைத்துக் கட்சித் தோழர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சிபற்றி ஒரு அழகான பின்னணி நினைவிற்கு வருகிறது. இது ஒரு எளிய குடும்பம்; அதுவும் ஒரு சிறிய கிராமத்திலிருந்து அவர்கள் வந்து, தங்களுடைய உழைப்பால், தங்களுடைய கொள்கை உணர்வினால், அவருடைய அன்பும், ஆற்றல் திறத் தால், எந்த அளவிற்கு உயர முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டான இந்தக் குடும்பம்தான், பெரியாரின் பெருங்குடும்பமாகும்.
தந்தை பெரியார் அவர்கள் மறையவில்லை
அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மறையவில்லை. அவர் என்றைக்கும் வாழ்ந்து கொண்டி ருக்கிறார் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், இதுபோன்ற நிகழ்வுகள்தான் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
சில நாள்களுக்கு முன்பு, ஒரு ஆங்கிலப் பத்திரிகை செய்தியாளரான ஒரு தோழியர் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு பேட்டி வேண்டும் என்றார். அப்பொழுது நான் அவசரமாக வெளியூர் பயணத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். உங்களுக்கு அவசரம் என்றால், தொலைப்பேசியிலேயே கேள்வி கேட்கலாம் என்றேன். அவசரம் இல்லை என்றால், இரண்டு நாள்கள் கழித்து என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்றேன்.
அந்த அம்மையார், இல்லை, இல்லை நாளை மறுநாள் அந்தச் செய்தி வெளியாகவேண்டும் என்று எனக்கு கட்டளையிட்டு இருக்கிறார்கள். ஆகையால், நான் தொலைபேசியிலேயே கேள்வி கேட்டால், நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களே என்றார்.
அதற்காகத்தானே தொலைப்பேசி இருக்கிறதே, கேளுங்கள் என்றேன்.
அவருடைய கேள்வி என்னவென்றால், பெரியார் அவர்கள் மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெரியாரைப் பார்க்காத தலைமுறை, பெரியாருடைய உரையைக் கேட்காத இளைஞர்கள், பெரியாருடைய பல்வேறு நிலைகளைப்பற்றி மூத்தவர்கள், வயதானவர்கள் தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு எப்படி இருக்கிறதோ, அதைப் பெறாத இளைஞர்கள், இன்றைக்கு ஏராளம் கருஞ்சட்டை அணிந்துகொண்டு, பெரியார், பெரியார் என்று சொல்லி வருகிறார்களே, அதனுடைய ரகசியம் என்ன? அதற்கு என்ன மூலகாரணம்? என்று உங்களிடம் கேள்வி கேட்டு, ஆய்வு நடத்தி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று சொன்னார்.
என்றைக்கும் பெரியார் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்!
அதற்கு நான் பதில் சொன்னேன். பெரியார் அவர்கள் மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் 450 ஆண்டுகள் ஆனாலும், 4500 ஆண்டுகள் ஆனாலும், பெரியார் மறையமாட்டார்; வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
காரணம், பெரியார் என்பவர் ஒரு தனி நபர் அல்ல; பெரியார் என்பவர் ஒரு நிறுவனம்; பெரியார் என்பவர் ஒரு தத்துவம்; பெரியார் என்பவர் ஒரு லட்சியத்தினுடைய உருவகம். எனவேதான், அவருக்கு என்றைக்கும் மரணமில்லை.
எப்படி சாக்ரட்டீசுக்கு என்றைக்கும் மரணமில் லையோ, எப்படி பகத்சிங்கை தூக்கு மேடையில் நிறுத்திய பிற்பாடுகூட மரணமில்லையோ - அவர்கள் எல்லாம் வாழ்கிறார்கள் என்பதற்கு என்ன அடையாளம் என்று சொன்னால், அவருடைய தியாகங்கள், கொள்கை கள்தான். இன்றைக்கும் அவர்களைப் பார்க்காத தலை முறை - 24 வயதிலேயே ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறான் என்று சொன்னால், பெரிய புரட்சிக்காரர் என்று கருதப்பட்டு தூக்கு மேடையில் அவன் நிறுத்தப்படுகிறான் என்று சொன்னால்,
தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் அடித்தவர்
அதுபோல, தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் அடித்தவர். வாழ்நாளுக்குப் பிறகும் அவருடைய கொள்கைகள் எதிர்நீச்சல் அடித்துக் கொண் டிருக்கிறது. எனவே, அது ஒரு தொடர் போர் என்றேன். இதனை அந்தச் செய்தியாளர் உள்வாங்கிக் கொண்டு, அதனை செய்தியாக ஆக்கியிருக்கிறார்.
அப்படிப்பட்ட தத்துவம் வாழ்கிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், இதோ இன்றைக்கு மணிவிழா மணமக்களாக இருப்பதோடு மட்டுமல்ல, இதற்கு போனஸ் தமிழ்ப்பொன்னி என்பதுதான் மிக முக்கியம்.
ஏனென்றால், இது தொழிலாளர் நிறைந்த அரங்கம். தொழிலாளர்களுக்கு போனஸ் முக்கியம். ஆகவேதான், அந்த மொழியிலேயே தெளிவாக சொல்லவேண்டுமானால், பாவேந்தர் விரும்பியும் - விஜயலட்சுமியம் எவ்வளவு அடக்கமானவர்கள்.
இங்கே அழகாக சொன்னார் சந்திரசேகரன் அவர்கள். அடக்கமாக இருப்பவர்கள் என்று. அடக்கமாக இருப்பது என்பது ஒரு வார்த்தை. ஆனால், இவர் அடக்கமாக இருப்பதில்லை. அடக்கத்திற்கும் கீழே இருக்கிறார். இங்கே மணமக்கள் அமர்ந்திருப்பதைப் பாருங்கள். யார் மணமகன்? யார் மணமகள்? என்பது பெரிய விவாதத்திற்குரிய ஒன்றாகும்.
பெரியார் செய்த சாதனை!
விஜயலட்சுமி மணமகனாக இருக்கிறார்; மணமகளாக பாவேந்தர் இருக்கிறார். இது ஒரு கண்கொள்ளா காட்சி. இதுதான் பெரியார் செய்த சாதனை!
பெரியார் என்ன செய்தார் என்று கேட்டால், இதைத் தான் பெரியார் செய்தார்; இதைத்தான் திராவிடர் கழகம் செய்தது. இதைத்தான் சுயமரியாதை இயக்கம் சாதித்துக் காட்டியது.
பணி நிறைவு அடைந்திருக்கிறார். அது பணி நிறைவு அல்ல. இனிமேல்தான், அவருக்கு பணி அதிகமாக இருக்கும். பணிக்காலத்தில், உயிர்க்காகக்கூடிய ஆம் புலன்சு ஓட்டுநராக இருந்திருக்கிறார். பாவேந்தர் அவர்களை எத்தனையோ ஆண்டுகளாக எனக்குத் தெரியும். எல்லா நிகழ்வுகளுக்கும் அவர் வருவார்; ஒரு கும்பிடு போட்டுவிட்டு கடைசி இடத்தில்தான் அமர்ந்திருப்பார். கலகலவென்று பேசமாட்டார் அவர். ஆனால், அந்தக் குறையை விஜயலட்சுமி அவர்கள் போக்கிவிட்டார்.
ஒரு சிறிய எடுத்துக்காட்டு, திராவிடர் இயக்கத் தோழர்கள், பெரியார் தொண்டர்கள் எந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், நாணயமாகவும், ஒழுக்கமாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் செய்வார்கள் என்பதற்கு பாவேந்தர் அவர்கள் அற்புதமான ஒரு எடுத்துக்காட்டு. விஜயலட்சுமி அவரையும் மிஞ்சக்கூடிய மற்றொரு எடுத்துக்காட்டு.
பணிக்காலத்தில் ஒரு சிறு விபத்துகூட இல்லாமல்....
34 ஆண்டுகள் அவர் அந்தப் பணியில் இருந் திருக்கிறார். இந்த 34 ஆண்டுகளாக உயிர்காக் கக்கூடிய அந்தப் பணியை அவர் செய்திருக்கிறார். அவருடைய பணிக்காலத்தில் ஒரு சிறு விபத்துகூட இல்லாமல் அவருடைய பணியை செய்திருக்கிறார் என்பது இருக்கிறதே, இது நம்முடைய ஓட்டுநர்கள் எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி. இந்த அரங்கத்திற்கு மட்டுமல்ல, இந்த நாட்டிற்கே, இந்த உலகத்திற்கே தெரிவிக்கவேண்டிய செய்தியாகும்.
எங்களைப் போன்றவர்கள் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், எங்களுடைய வாழ்விணையர் ஒரு காரணம்; மற்றொரு காரணம், மருத்துவர்கள் காரணம். இதை எல்லாவற்றையும்விட எங்களைக் காப்பாற்றும் காரோட்டி நண்பர்கள். அவர்கள் எங்களுடைய பாதுகாவலர் போன்றவர்கள்.
பாதுகாவலர்கள்கூட சில நேரங்களில் விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். எங்களுடைய காரோட்டி நண்பர் கள் இருக்கிறார்களே, அவர்கள் மிகக் கவனமாக ஓட்டுவதினால், விபத்துகள் ஏற்படுவதில்லை. அந்த அளவிற்கு அவர்களுக்குக் கடமை உணர்வு. தாங்கள் எடுத்துக்கொண்ட பொறுப்பை உணர்ந்து செயல் படுவதுதான் மிக முக்கியமானது.
தந்தை பெரியார் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் கோபம் வராது. ஆனால், ஏதாவது ஒரு விஷயத்தில் கோபம் வந்துவிட்டால், அவர் அதிகமாகக் கோபப்பட்டு சொல்கின்ற ஒரே ஒரு சொல், நிறைய நண்பர்களுக்குத் தெரியாது, அய்யா அறிவுக்கரசு போன்றவர்களுக்கு அது தெளிவாகத் தெரியும். அது என்ன சொல் என்றால், என்ன பொறுப்பில்லாமல்'' என்கிற வார்த்தையை சொல்வார்.
ஆகவே, அப்படிப்பட்ட அந்தப் பொறுப்பு என்று இருக்கிறதே - எதை, யார், எந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டாலும், அதனை சிறப்பாக செய்யவேண்டும் என்ற அளவில் வழிவந்தவர்தான் பாவேந்தர் அவர்கள்.
தன்னைப்பற்றி அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார்
அவரைப்பற்றி குறிப்புகளை கேட்கும்பொழுது சொன் னார்கள், தன்னைப்பற்றி அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார். தன்முனைப்பு என்றாலே, என்ன வென்று தெரியாத ஒருவர் அவர்.
விஜயலட்சுமி அவர்கள் தன்னுடைய நன்றியுரையில் உரையாற்றும்பொழுது தெளிவாக சொன்னார். இவரு டைய தாயார் - தந்தையார்; அதேபோன்று அவருடைய குடும்பம். இவர்கள் மட்டும் ஒன்றிப் போவதில்லை. குடும் பம் என்று வருகின்றபொழுது, அவர்களுக்கு என்ன தேவையோ அதனை அவர் செய்திருக்கிறார்.
அதேபோன்ற இவருடைய குடும்பத்திற்கு என் னென்ன தேவையோ அத்தனையையும் அவர் செய்தி ருக்கிறார்.
எனவே, அவர்களுக்குள்ள வாழ்விணையர்கள் என்று சொன்னால், வாழ்க்கையில், நம்மைப் பெற்றவர் கள், நம்மை ஆளாக்கியவர்கள் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்; அந்தப் பொறுப்பையும் சேர்த்து அவர் செய்திருக்கிறார் என்றால், இளைஞர்களே, இதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள், பின்பற்றுங்கள்.
மற்றவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டானது
எனவே, அவர்களைப் பாராட்டவேண்டும் என்பதற் காக மட்டும் இந்த விழா இல்லை. அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் கடைபிடித்திருக்கின்ற கடமை உணர்வு என்பது மற்றவர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டானது என்பதுதான் மிகவும் முக்கியம்.
இன்றைக்கு என்னை அவர் வரவேற்ற நேரத்தில், மிக இளமையாகத் தோன்றினார். நான் அவரிடம் கேட்டேன், என்ன பாவேந்தன், இளைஞரணி தலைவர் போன்று வருகிறீர்களே'' என்று வேடிக்கையாக சொன்னேன். அவர் மகிழ்ச்சியடைந்தார்.
வயது என்பது இருக்கிறதே, 60 வயது, பணி நிறைவு என்பது - சில பேரை பார்த்தீர்களேயானால், அதிலும் அரசு பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களைப் பார்த்தீர் களேயானால், ஓய்வு பெறும் நாளிலிருந்து ஒரு இரண்டு, மூன்று நாள்களிலேயே அவர்கள் கொஞ்சம் வயதானவர்கள்போன்று தோற்றமளிப்பார்கள். ஏனென் றால், அவர்கள் எதையோ இழந்துவிட்டோம் என்கிற உணர்வினைப் பெறுகிறார்கள். ஆனால், அதற்கு மாற்று என்ன என்று சொன்னால், தொண்டறம் என்பதுதான். ஒரு பணியிலிருந்து நான் இன்னொரு பணிக்கு மாறிப் போகிறேன் என்பதுதான்.
முழு நேரம் கழகப் பணிகளை செய்வார்
இதுவரையில் பாவேந்தன் அவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியிலிருந்தார்; பகுதி நேரமாக கழகப் பணிகளை செய்துகொண்டிருந்தார். அந்தப் பணியி லிருந்து ஓய்வு பெற்ற பாவேந்தன் அவர்கள் முழு நேரம் கழகப் பணிகளை செய்வார். அதற்காக அவரை வரவேற்று பாராட்டுவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. அவரை இன்னும் உற்சாகப்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் மணிவிழா என்று சொல்லக்கூடிய இந்த விழா. இரண்டு பேரும் மீண்டும் மணமக்களாக இருக்கக்கூடிய சூழல்.
ஆகவே, அவர்கள் எல்லா வகையிலும் எடுத்துக் காட்டான குடும்பத்தினர். அந்த வகையில், அற்புதமான ஒரு குடும்பம். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்லக்கூடிய வகையில் இந்தக் குடும்பம் மிகச் சிறப்பான குடும்பம்.
நம் நாட்டிலுள்ள கிராமங்களில் பிள்ளைகளைப்பற்றி பேசும்பொழுது, ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஒரு ஆண். சொத்துக்கு ஆண் பிள்ளை; ஆசைக்குப் பெண் பிள்ளை என்பதுதான் அதனுடைய அர்த்தம்.
பெண்ணுக்கு சொத்துரிமை இல்லை என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள். இதனை மாற்றி உடைத்த இயக்கம் தந்தை பெரியாருடைய இயக்கம். டாக்டர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய அமைச்சர் பதவியை விட்டுப் போவதற்கே இந்த சட்டம்தான் காரணமாக இருந்தது.
பல பேர் பதவியை விட்டுப் போகிறார்கள் என்றால், இதைவிடப் பெரிய பதவி கிடைக்கவில்லையே என்கிற காரணத்தினால் இருக்கும். ஆனால், அம்பேத்கர் அப்படி இல்லை.
அமைச்சர் பதவியிலிருந்து அம்பேத்கர் ஏன் விலகினார்?
இந்து சட்டத் திருத்த மசோதாவில், பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்று சொன்னார் அம்பேத்கர் அவர்கள். அதை நேரு போன்றவர்களால், முற்போக்குச் சிந்தனை தமக்கிருக்கிறது என்று சொன்னாலும், அன்றைய சனாதனத்தை எதிர்த்து அவரால் நிற்க முடியவில்லை. அன்றைக்குக் குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மறைமுகமாக அன்றைக்குக் காங்கிரசுக்குள்ளேயே ஊடுருவி மிகப்பெரிய அளவிற்கு அந்தப் பணிகளைச் செய்தார்கள். அதற்காக ஒரு பெரிய ரகசிய இயக்கம் நடந்தது. கடைசியில், நேரு அவர்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, அந்த சட்டத்தினை நிறைவேற்ற முடியவில்லை. அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் என்று அம்பேத்கரிடம் சொன்னார்.
உடனே அம்பேத்கர் சொன்னார், நான் சட்டத்தைத் திரும்பப் பெறமாட்டேன்; பதவியை விட்டு வேண்டு மானால் விலகுகிறேன் என்று சொல்லி, அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
பெரியார் கொள்கைகள் என்பவை சாதாரணமானவையல்ல!
அன்றைக்கு அம்பேத்கர் அவர்களால் சாதிக்க முடியவில்லை. ஆனால், பெரியார் கொள்கை என்பது இருக்கிறதே, அக்கொள்கை இறுதியில் வெற்றி பெறக்கூடிய மிகப்பெரியதொரு கொள்கையாகும். அது சாதாரணமான கொள்கையல்ல என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
அதற்குக் கண்டிப்பாக வெற்றி உண்டு. நீட் தேர்வு வந்துவிட்டதே, உயர்ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் வந்துவிட்டதே - பெரியார் கொள்கை தோற்றுவிட்டதோ என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், இறுதியில் வெற்றி பெறும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தை சொல்கிறேன். இங்கே ஏராளமான தாய்மார்கள் குடும்பத்துடன் வந்திருக்கிறீர்கள். நீங்களெல்லாம் புரிந்து கொள்ளவேண்டிய செய்தி என்ன?
2006 ஆம் ஆண்டில் நிறைவேறிய சட்டம்!
2006 ஆம் ஆண்டில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்ற மத்திய ஆட்சியில் - மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது, பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. எந்தச் சட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என்று அந்தக் காலத்தில் சொன்னதோ - நேருவால்கூட செய்ய முடியாததை - நேருவின் வாரிசுகள் வந்த நேரத்தில் - அதனை செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதே திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையில் பங்கேற்றதன் காரணமாகத்தான்.
அந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்பு, பெரியாருடைய சிந்தனைகள் அதற்குக் கவசமாக இருந்து பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை 2006 இல் நிறைவேற்றினார்கள்.
1954, 1956 ஆம் ஆண்டு காலகட்டத்தில், பெண்களுக் கான சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்ற முடிய வில்லை. ஆனால், அந்த சட்டம் தோற்றுப் போய் விடவில்லை.
பெரியார் வாழ்கிறார் - பெரியார் வாழ்வார்!
தொடக்கத்தில் அந்தச் சட்டம் வெற்றி பெறாத ஒரு சூழல் இருந்திருக்கலாம். ஆனால், யாரால் நிறைவேற்ற முடியவில்லை என்று சொன்னார்களோ, அதே கட்சி அதனை ஏற்று நிறைவேற்றக் கூடிய அளவிற்கு வந்தது என்றால்,
பெரியார் வாழ்கிறார் -
பெரியார் வாழ்வார்
பெரியாருடைய சமூகப் புரட்சி என்பது இருக்கிறது, அது ஒரு தொடர் லட்சியப் பயணமாகும்.
சில வேகத்தடைகள் எல்லாம் பயணத்தின்போது இருக்கும்; அதனைக் கடந்து வருவோம். ஆகவேதான், இந்தக் கொள்கைகள் வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் இந்தக் குடும்பம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
இந்த விழாவிற்கான அழைப்பிதழைப் பாருங்கள்; நன்றியுரைக்குக் கீழே இருப்பதைப் பாருங்கள். நாங்கள் எதையும் கடைசி வரிவரை படிப்பவர்கள்.
தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்கும் என்று சொல்லி, மிக முக்கியமாக உறவுக்காரர்கள் அவ் வளவுபேரும் - கட்சியினரும் என்று போட்டிருக்கிறார்.
இதில் பெயர்கள் முக்கியமல்ல; முன்பெல்லாம் பெயர் களுக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்கள் இருக்கும். அது படித்து வாங்கிய பட்டமல்ல; பாரம்பரியமாக வந்த பட்டம் அது.
ஆனால், படித்து வாங்குகின்ற பட்டம் இருக்கிறதே, கடினமாக உழைத்துப் பாடுபட்டு படித்து, தேர்வு எழுதி அதற்குப் பிறகு வந்த அறிவியல் ரீதியாக, கல்வி ரீதியாக வந்த பட்டங்கள்.
எத்தனைப் பொறியாளர்கள், எத்தனை பட்டதாரி கள் இவ்வளவும் இந்தக் குடும்பத்தில் இருந்து வந்திருக் கிறார்கள். இந்த மாறுதல்கள் எப்படி வந்தது?
சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னார்கள்.
வெளிநாடுகளில், கருப்பர் - வெள்ளையர் பிரச்சினை உண்டு. ஆனால், அவர்கள்கூட கருப்பர்கள் அருகில் வரக்கூடாது என்றுதான் சொன்னார்களே தவிர, கருப்பர்கள் படிக்கக்கூடாது என்றோ, அப்படி தவறிப் படித்தால், நாக்கை அறுக்கவேண்டும் என்றோ, காதால் கேட்டால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்றோ சொல்லவில்லை.
இன்றைக்கு இவ்வளவு பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன!
அப்படி எழுதிய ஒரு சமுதாயத்தில், இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், ஒரு சாதாரண கிராமத்தில் உள்ள முதல் தலைமுறை, அதற்கு முன் உள்ள மூன்று தலை முறைகளை எடுத்துப் பார்த்தால், கைநாட்டு வைக்கின்ற கிராமத்தினர் மத்தியில், இன்றைக்கு இவ்வளவு பேரும் படித்திருக்கிறார்கள் என்று சொன்னால், இது சரசுவதி பூஜையினால் வந்தது அல்ல நண்பர்களே! பெரியார் என்ற மாபெரும் தத்துவம் - பெரியார் என்ற சகாப்தம் - திராவிட இயக்கத்தினுடைய உழைப்பு - கல்வி வள்ளல் காமராசர் அவர்களுடைய பணி, நீதிக்கட்சியினருடைய பணி, இன்னும் வரிசையாக கலைஞர் காலம் வரையில், எல்லா இடங்களிலும் இன்றைக்கு எழுத்தறிவினுடைய விளைவுதான், இன்றைக்கு இவ்வளவு பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதைத்தான் நீங்கள் அருள்கூர்ந்து புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே, இந்தக் குடும்பம் பல்வேறு நல்ல பணிகளை யெல்லாம் செய்யக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் மேலும் பல ஆண்டுகள் இந்தப் பணிகளை அவர்கள் சிறப்பாக செய்யவேண்டும் என்று எடுத்துச் சொல்லி,
இந்தப் பணிகளை சிறப்பாக அவர்கள் செய்ய இயக் கம் உறுதுணையாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லி,
அவர்கள் மேலும் பல பொறுப்புகளில் வரவேண்டும். ஏற்கெனவே அவர்களிடம் பேசியிருக்கிறேன். தங்கள் அன்புள்ள பாவேந்தன் விரும்பி என்று பெயர் போட்டு, அதற்குப் பக்கத்தில் கம்மாபுரம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் என்று போட்டிருக்கிறார்.
முதலில் அதை நான் சரியாகக் கவனிக்கவில்லை. அவருக்கு ஒரு புதிய பதவியை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு, மற்ற தோழர்களிடம் ஆலோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு முன்பே எங்கள் தோழர்கள் அவரைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், முந்திக்கொண்டார்கள்.
பல்லாண்டு காலம் வாழவேண்டும்
அந்த வகையில், அவர்கள் மேலும் இந்த இயக்கத் திற்குப் பெரும் துணையாக இருக்கவேண்டும். அவருக் குத் துணையாக வாழ்விணையராக இருக்கக்கூடிய நம்முடைய விஜயலட்சுமி அவர்கள் எல்லா வகையிலும் சிறப்பாக இருந்து, மேலும் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.
இந்த மணிவிழா என்பது மிகவும் சாதாரணமானது. ஏனென்றால் இதற்குப் பிறகு எத்தனையோ விழாக்கள் இருக்கின்றன. இதற்கு முன் மனிதனுடைய சராசரி வயது 70. இன்றைக்கு அதையும் தாண்டியாகி விட்டது. அந்த வகையில், எல்லா நலன்களும் பெற்று வாழவேண்டும்.
அவர்கள் மட்டுமல்ல, இங்கே வந்திருப்பவர்களுக்கு அன்பான வேண்டுகோள். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஒருமுறையோ, இரண்டு முறையோ நீங்கள் நல்ல மருத்துவரிடம் உடற்பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நல்ல அளவிற்கு உற்சாகமாக இருங்கள், எப்போதுமே!
இளமை என்பது வயதைப் பொறுத்தது அல்ல!
நல்ல அளவிற்கு உற்சாகமாக இருங்கள் எப்பொழுதும். மனம் திறந்து பேசக்கூடிய நண்பர்களை நீங்கள் பெறுங்கள். எந்த நூல்களைப் படித்தால், உற்சாகமும், மகிழ்ச்சியும், புத்தாக்கமும் ஏற்படுமோ, அப்படிப்பட்ட நூல்களை நீங்கள் வாங்கிப் படியுங்கள்.
உங்கள் இளமையை நீங்கள் என்றைக்கும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இளமை என்பது இருக்கிறதே, அது வயதைப் பொறுத்தது அல்ல.
இளமை என்பது நம்முடைய உற்சாகத்தைப் பொறுத்தது; நம்முடைய நம்பிக்கையைப் பொறுத்தது. நம்முடைய ஊக்கத்தைப் பொறுத்தது.
நம்மால் முடியும் என்று நினைக்கவேண்டும். உடல் நலம் என்பதே, உள்ள நலத்தைப் பொறுத்ததுதான். ஆகவேதான், மகிழ்ச்சியாக இருங்கள்.
கடவுள் மறுப்பாளர்கள் அதிக வயது வாழ்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையா ளர்களுக்கு வயது குறைவு என்று ஒரு ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கடவுள் நம்பிக்கையாளர்களைப் பயப்படுத்தவேண் டும் என்பதற்காக இதனை நாங்கள் சொல்லவில்லை. ஒரு ஆய்வு செய்துதான் இதனை சொல்லியிருக்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம் என்று சொன்னால், கடவுள் மறுப்பாளர்கள், தவறு செய்தால், தண்டனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள். வெற்றியா தன்னால் முடியும் என்று நினைப்பவர்கள்.
ஆனால், கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு இருக் கின்ற ஒரு பலகீனம் என்னவென்றால், எதுவும் என்னுடைய கைகளில் இல்லை. எல்லாம் அவன் செயல்; எல்லாம் அவன் செயல் என்று சொல்வதினால், தன்னம்பிக்கை அங்கே வளருவதற்கு இடமில்லை. இதுதான் தத்துவ ரீதியான உண்மையாகும்.
தன்னம்பிக்கையினுடைய சிகரத்திற்கு அவர்கள் படிப்படியாக செல்கிறார்கள்
ஆனால், நம்மால் முடியும்; நம்மால் முடியாதது; வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது; நம்மால் மட்டுமே முடியும் என்ற அந்தத் தன்னம்பிக்கையினுடைய சிகரத்திற்கு அவர்கள் படிப்படியாக செல்கிறார்கள்.
மணிவிழா கொண்டாடும் இணையர்களின் வயது என்ன? இன்றைக்கு இரண்டு பேரும் இவ்வளவு இளமையாக இருக்கிறார்கள். எனவே, மனோதத்துவ ரீதியான வயதுதான் மிக முக்கியம். உடல் உறுப்புகளுக்கு வயதாகும். அதனை சரிப்படுத்துவதற்காகத்தான் ஏராள மான மருத்துவ உதவிகள் வந்திருக்கின்றன.
மகிழ்ச்சி என்பது கடையில் வாங்குவது அல்ல
எனவேதான், அதையும் பயன்படுத்திக் கொண்டு, நல்ல பணி, மனதிற்கு உகந்த பணிகளை செய்யவேண்டும்.
மகிழ்ச்சி என்பது கடையில் வாங்குவது அல்ல;
மகிழ்ச்சி என்பது மனதில் இருப்பது. நாம் உருவாக்கிக் கொள்வது.
இரண்டு பேரும் ஒரே சிந்தனையில் இருக்கிறார்கள். இது ஒரு நல்ல குடும்பம்; மகிழ்ச்சியான குடும்பம்; எடுத்துக்காட்டான குடும்பம். இவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும். நூற்றாண்டு விழா நடத்தினாலும், அந்த விழாவிற்கும் நாங்கள் வருவோம்.
ஏனென்றால், இப்பொழுது உடல் உறுப்புகளை, காரிலுள்ள பகுதியில் ஏதாவது பழுது ஏற்பட்டால், அதனை மாற்றுவதுபோல, உடல் உறுப்புகளில் ஏதாவது பழுது ஏற்பட்டால், அந்த உறுப்புகளை மாற்றிக்கொள்கின்ற அளவிற்கு மருத்துவ வசதி வளர்ந்திருக்கிறது.
அய்யா மிகவும் அழகாக இனிவரும் உலகத்தில், மனிதர்கள் இனிமேல் நூறு வயதுவரை வாழ்வார்கள்'' என்றார்.
இனி வருங்காலத்தில் மனிதர்களுக்கு சுலபத்தில் இறப்பு வராது
எளிமையாக மேடையில் உரையாற்றும்பொழுது, இனி வரும் காலத்தில், மனிதர்களுக்கு சுலபத்தில் இறப்பு வராது'' என்றார்.
ஏனென்றால், அவ்வளவு வாய்ப்புகள் இன்றைக்கு இருக்கிறது.
அதேநேரத்தில் திட்டமிட்ட வாழ்க்கையை வாழ வேண்டும். எனவேதான், நீங்கள் நல்ல உள்ளத்தோடு, மகிழ்ச்சியோடு இல்லறம் சிறந்தது; அதைவிட தொண் டறம் சிறந்தது. பொதுப் பணி, தனிப் பணி எல்லாப் பணிகளும் எங்களுக்கு உண்டு என்று அந்தப் பொறுப்பு களைச் சரியாக செய்து வருகிறீர்கள்.
முதுமை என்பது வேறு;
முதிர்ச்சி என்பது வேறு
பல்லாண்டு காலம் வாழ்க என்று சொல்லி, இந்த இல்லத்தில் நடைபெறும் எல்லா விழாக்களுக்கும் நாங்கள் வந்திருக்கிறோம்; நாளைக்கு எத்தனை விழா நடந்தாலும், அதனை நடத்தி வைப்பதற்குத் தயாராக இருக்கிறோம். நீங்கள் பணியாற்ற, பணியாற்ற இளமை உங்களுக்குத் தானே வரும்; முதுமை வராது. முதுமை என்பது வேறு; முதிர்ச்சி என்பது வேறு.
வயது அதிகமானால் பல பேர்களுக்கு முதிர்ச்சி வரும்- பகுத்தறிவாளர்களுக்கு. பகுத்தறிவாளர்கள் அல்லாதவர்களுக்கு வேண்டுமானால், முதுமை வரலாமே தவிர, முதிர்ச்சி வராது. ஆகவே, இது முதிர்ச்சி. ஆகையால், எங்களுக்கு எந்தவிதமான அதிர்ச்சியும் கிடையாது என்பதை எடுத்துச் சொல்லி,
பல்லாண்டு காலம் வாழ்க! வாழ்க!! என்று வாழ்த்தி, வெங்கடேசன் அவர்கள், அடுத்த தலைமுறையில், அந்த விழுதுகள், சிறப்பாக, பலமான விழுதுகள் என்று சொல்லக்கூடியவர்கள் வந்திருக்கிறார்கள்.
எல்லா எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய அரும்பணி பெரியாரின் பெரும்பணி
அப்படிப்பட்ட இளைய தலைவரை, எடுத்துக்காட் டான தலைவரை - எந்தப் பணியில் நீங்கள் ஈடுபடு கிறீர்களோ - அந்தப் பணி ஒரு பெரும் பணி - ஒரு லட்சியப் பணி - பெரியாரின் பெரும்பணி - சமூகநீதிக்கு ஆபத்தா? அல்லது பெண்ணுரிமைக்கு ஆபத்தா? எல்லா எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய அரும்பணி பெரியாரின் பெரும்பணி என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வாழ்க பாவேந்தன் விரும்பி - விஜயலட்சுமி மணமக்கள்! வளர்க பகுத்தறிவு!!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 22.1.19