புதுடில்லி, மார்ச் 30 இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961- இன்படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த கால அளவை 26 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக மேற்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு வகை செய்யும் மகப்பேறு உதவி சட்டத்திருத்த மசோதா-2016, கடந்த மார்ச் 9- ஆம் தேதி மக்களவையிலும், 20- ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மசோதாவுக்கு கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி 55 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 12 வாரகால பிரசவ விடுமுறை தற்போது 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இந்த 26 வாரகால விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு பிரசவ விடுமுறை அளிப்பதில் கனடா (50 வாரங்கள்), நார்வே (44 வாரங்கள்) நாடுகளுக்கு அடுத்த இடத்தை இந்தியா (26 வாரங்கள்) பிடித்துள்ளது.
-விடுதலை,30.3.17